இலங்கையின் நீண்ட காலமாக இயங்கும் தனியார் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், தனது வருடாந்த முகவர் விநியோக விருதுகள் 2025 நிகழ்வை கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வு, நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற ஆலோசகர்களையும் தலைவர்களையும் அங்கீகாரமளித்து கௌரவித்துக் கொண்டாடும் மாலைப்பொழுதில் ஒன்றிணைத்தது. “Legacy to Infinity” என்ற அந்த மாலைப்பொழுதின் கருப்பொருளானது, அனைத்து இலங்கை மக்களுக்கும் மிக முக்கியமானவற்றைப் பாதுகாப்பதற்காக பல தலைமுறை ஆலோசகர்கள் மற்றும் தலைவர்களால் கட்டியெழுப்பப்பட்ட நிலையான பாரம்பரியத்தைப் பிரதிபலித்ததுடன், வரவிருக்கும் ஆண்டுகளில் இன்னும் பெரிய சாதனைகளை நோக்கி பயணிப்பதற்கான ஊக்கத்தையும் அளித்தது.
இந்நிகழ்வில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் தலைமை அதிகாரி கிரிஷான் பாலேந்திரா கலந்து கொண்டதுடன், யூனியன் அஷ்யூரன்ஸ் தலைமைத்துவ அணியினரான, பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பிரதம முகவர் அதிகாரி ஆகியோருடன், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விருதுகளைப் பெற்றுக் கொண்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.
யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் பாரம்பரியத்திற்கு இணங்க, மிகச்சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய ஆலோசகர்களுக்கு 60 மில்லியன் ரூபாயிற்கும் அதிக மதிப்புள்ள வெகுமதிகள் வழங்கப்பட்டன. இதில் ஆண்டின் மிகச்சிறந்த சாதனையாளருக்கு நிறுவனத்தினால் முழுமையாகப் பராமரிக்கப்படும் Mercedes-Benz கார், பணப்பரிசுகள், உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கான சொகுசுச் சுற்றுலாக்கள் மற்றும் பல ஊக்கத்தொகைகளும் உள்ளடங்குகின்றன. இது இத்துறையிலேயே மிகச்சிறந்த அங்கீகாரத்தை வழங்குவதன் மூலம், சாதனைகளைப் பாராட்டுவதில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருந்தது.
இவ்விருதுகள் வெண்கலம், வெள்ளி, தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் ஆகிய பிரிவுகளுடன், மிகச்சிறந்த பிராந்தியம், வலயம் மற்றும் தலைவர் ஆகிய விருதுகளையும் உள்ளடக்கியிருந்ததுடன், தனிநபர் சாதனை, தலைமைத்துவம், வணிக வளர்ச்சி மற்றும் பிராந்திய முடிவுகள் ஆகியவற்றிலான திறமைகளையும் பாராட்டியிருந்தன. அந்த மாலைப்பொழுதின் மிக உயர்ந்த கௌரவமான Ultimate Champion விருது, கிருலப்பனை பிராந்தியத்தின் சிரேஷ்ட தனிநபர் பிரிவுப் பணிப்பாளரான உபுல் பிரியந்தவுக்கு வழங்கப்பட்டது. அத்துடன், இந்த ஆண்டில் அவர் வெளிப்படுத்திய அதிசிறந்த செயல்திறன் மற்றும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவர் New Business Champion ஆகவும் கௌரவிக்கப்பட்டார். மேலும், புதிய வணிக உருவாக்கம், வாடிக்கையாளர் நன்மதிப்பு முகாமைத்துவம், திறமை மேம்பாடு, தலைமைத்துவம் மற்றும் பிராந்திய செயல்திறன் ஆகியவற்றிலான சாதனைகளுக்காக, நாடளாவிய ரீதியிலுள்ள பிராந்தியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 300 க்கும் மேற்பட்ட ஆலோசகர்களும் தலைவர்களும் இந்நிகழ்வில் பாராட்டப்பட்டனர். ஒட்டுமொத்தமாக, இந்த வெற்றியாளர்கள் வெளிப்படுத்திய தொழில்முறைத் தகைமை, அர்ப்பணிப்பு மற்றும் வாடிக்கையாளர் மீதான அக்கறை ஆகியன, இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றாக யூனியன் அஷ்யூரன்ஸ் கொண்டுள்ள நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்துவதை பிரதிபலிக்கின்றன.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான செனத் ஜயதிலக வெற்றியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றும் போது கருத்துத் தெரிவிக்கையில், “இன்று கௌரவிக்கப்படும் கௌரவிப்புகளினூடாக, யூனியன் அஷ்யூரன்ஸின் வலிமை பிரதிபலிக்கப்படுவதுடன், எமது முகவர் விநியோகப் பிரிவினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் வளர்ச்சி மற்றும் வெற்றிகரமான செயற்பாடுகளில் ஆற்றப்படும் பங்களிப்பும் பிரதிபலிக்கப்பட்டுள்ளன. எமது இலக்குகளை விரிவுபடுத்துவதிலும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை ஆழப்படுத்துவதிலும், இலங்கைத் குடும்பங்கள் தங்களின் நிதியியல் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கேற்ற தீர்வுகளை வழங்குவதிலும் எமது நிபுணத்துவ ஆலோசகர் வலையமைப்பானது ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது. இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள தகைமையானது சந்தையில் எமது நிலையை மேலும் வலுப்படுத்துவதுடன், எமது மூலோபாய லட்சியங்களை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்து, வரவிருக்கும் தலைமுறைகளுக்கான முதன்மைத் தெரிவுக்குரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமாக எமது அந்தஸ்தை வலுப்படுத்தும் இவ்வேளையில், எங்களின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு நம்மை வலுவாக நிலைநிறுத்துகின்றது.” என்றார்.
வெற்றியாளர்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்து யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியின் பிரதம முகவர் அதிகாரி இம்தியாஸ் ஆனிப் கருத்துத் தெரிவிக்கையில், “எமது முகவர் விநியோகப் பிரிவின் முக்கியத்துவமானவர்களின் கொண்டாட்டமாக இன்றைய இரவுப்பொழுது அமைந்துள்ளது. எமது ஆலோசகர்களினால் வெளிப்படுத்தப்படும் ஈடுபாடு மற்றும் நிபுணத்துவம் என்பவற்றினூடாக, அவர்கள் நாளாந்தம் மேற்கொள்ளும் செயற்பாடுகளின் அர்ப்பணிப்பு மற்றும் பெருமைக்குரிய கலாசாரம் வெளிப்படுத்தப்படுகின்றது. பெறுபேறுகளுக்கு அப்பால், அவர்களை வேறுபடுத்திக் காண்பிப்பதில் அர்த்தமுள்ள வாடிக்கையாளர் உறவுகளை கட்டியெழுப்புவதில் காண்பிக்கும் ஈடுபாடு முக்கியத்துவம் பெறுகின்றது. விருதை வென்ற ஒவ்வொருவருக்கும் நான் வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், எமது முகவர் செயலணியின் எதிர்காலத்தை மாற்றியமைப்பதில் அவர்கள் ஆற்றும் பெறுமதி வாய்ந்த பங்களிப்புக்காக நன்றி தெரிவிக்கின்றேன்.” என்றார்.
கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய கூட்டுநிறுவனமான, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் (ஜேகேஎச்) அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. இது 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 80இற்கும் அதிகமான நிறுவனங்களைக் கொண்டு இயங்குகின்றது. அதன் அங்கத்துவ நிறுவனமாகத் திகழ்ந்து, துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2026 மார்ச் மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 40.6 பில்லியனையும், ஆயுள் நிதியமாக ரூ. 96.2 பில்லியனையும் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (IRCSL) அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும்.