இலங்கையில் நீண்ட காலமாக இயங்கும் தனியார் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், உலக நீரிழிவு தினமான நவம்பர் 14 ஆம் திகதி, தேசத்தின் முன்னேற்றத்தை பேணும் வகையில், தனது யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக திட்டத்தினூடாக, களுத்துறை விஹாரையில் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமொன்றை முன்னெடுத்திருந்தது. இந்தத் திட்டத்தினூடாக, நூற்றுக் கணக்கான யாத்திரிகர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு இலவசமாக நீரிழிவு இனங்காணல் பரிசோதனையை மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட்டதுடன், நீரிழிவு தவிர்ப்பு மற்றும் நிர்வகிப்பு தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வளமூலங்களை அணுகும் வசதியையும் வழங்கியிருந்தது. நாட்டில் பதிவாகும் உயிரிழிப்புகளில் 83% பங்களிப்பை வழங்கும் தொற்றா நோய் சுமையில் பிரதான பங்களிப்பை வழங்கும் நீரிழிவை கட்டுப்படுத்திக் கொள்வது தொடர்பில் நிறுவனத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் வகையில் இந்தச் செயற்பாடு அமைந்திருந்தது.

பெரும்பாலும் Silent killer என அழைக்கப்படும் நீரிழிவு நோய், வெளிப்படையான அறிகுறிகள் இன்றி உருவாகக்கூடும் என்பதால், பாரிய சிக்கல்கள் ஏற்படும் வரை தாம் இந்நோயுடன் வாழ்கிறோம் என்பதைப் பலர் அறியாமல் உள்ளனர். இலங்கையின் வயதுவந்தோரில் சுமார் 15% ஆனவர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், நீரிழிவு நோயின் தீவிரத்தன்மை குறித்த மட்டுப்படுத்தப்பட்ட விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகளை அணுகுவதிலும் அவற்றின் செலவுகளை ஏற்றுக்கொள்வதிலும் உள்ள தடைகள் காரணமாகப் பரிசோதனைகள் பெரும்பாலும் தாமதப்படுத்தப்படுகின்றன. அதிகளவான விழிப்புணர்வு மற்றும் ஆரம்பகட்டக் கண்டறிதலின் அவசியத்தை உணர்ந்து, சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை நீரிழிவுச் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து, யூனியன் அஷ்யூரன்ஸ், 2024 ஜூன் மாதத்தில் யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக திட்டத்தை ஆரம்பித்தது. தனிநபர்கள் தமது நோய்க்கான ஆபத்தினைச் சிறப்பாகப் புரிந்துகொண்டு முகாமைத்துவம் செய்வதற்கு உதவும் வகையில், இலவச மருத்துவப் பரிசோதனைகளையும் சமூக மட்டத்திலான சுகாதாரக் கல்வியையும் இத்திட்டம் வழங்குகின்றது.

ஆரம்பம் முதல், யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக திட்டம், சமூக வெளிவாரி நிகழ்ச்சிகள், பணிமனை அடிப்படையிலான செயற்பாடுகள் மற்றும் பொது விழிப்புணர்வு முயற்சிகள் மூலமாக நாடளாவிய ரீதியில் 28,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்குப் பயனளித்துள்ளது. இந்நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள், இச்சவாலின் பாரதூர நிலையை வெளிப்படுத்தியுள்ளன; அதற்கமைய, இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களில் கிட்டத்தட்ட 10% ஆனோர் நீரிழிவு நோயுடன் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் சுமார் 3% ஆனோர், இத்திட்டத்தில் கலந்துகொள்ளும் வரை தமக்கு இந்நோய் இருப்பது பற்றியறியாமல் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், நோயின் மறைந்திருக்கும் தாக்கத்தைக் கையாள்வதில், எளிதில் அணுகக்கூடிய பரிசோதனைகளும் ஆரம்பகட்டக் கண்டறிதலும் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது தெளிவாகப் புலனாகிறது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி செனத் ஜயதிலக இந்தத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில், நீண்டகாலப் பெறுமதியை உருவாக்குவது என்பது நிதிப் பாதுகாப்பிற்கும் அப்பாற்பட்டது என நாம் நம்புகிறோம். நாம் சேவையாற்றும் சமூகங்களின் முன்னேற்றத்தைப் பாதிக்கும் சமூகச் சவால்களைக் கையாள்வது எமது பொறுப்பாகும். இவ்வருட உலக நீரிழிவு தினத்தின் தொனிப்பொருளான ‘நீரிழிவு நோய் தொடர்பில் ஆரம்பகட்ட நடவடிக்கை எடுத்தல் என்பதுடன் யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக திட்டம் ஒன்றிணைந்திருப்பது, எமது முயற்சிகளின் பொருத்தப்பாட்டையும் முக்கியத்துவத்தையும் வலுவாக உறுதிப்படுத்துகின்றது. நிலையான, விரிவுபடுத்தக்கூடிய மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தலையீடுகள் மூலம், தனிநபர்கள் சிறந்த ஆரோக்கியத்தை நோக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உதவுவதுடன், நீரிழிவு நோய்க்கு எதிரான பரந்த தேசிய மற்றும் உலகளாவிய நடவடிக்கைகளுக்கும் நாம் பங்களிப்புச் செய்கிறோம்.” என்றார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி மஹேன் குணரட்ன இந்தத் திட்டம் தொடர்பில் குறிப்பிடுகையில், “நீரிழிவு நோயைக் கையாள்வதில் உள்ள மிகப்பெரிய சவால்களில் ஒன்று, சிக்கல்கள் ஏற்படும் வரை பலர் தமக்குள்ள நோய்க்கான ஆபத்து குறித்து அறியாமல் இருப்பதாகும். தாமதமான பரிசோதனைகள், பரிசோதனைச் சேவைகளை அணுகுவதிலுள்ள மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகள் மற்றும் செலவுகளை ஏற்றுக்கொள்வதிலுள்ள பொருளாதார நெருக்கடிகள் ஆகியவை ஆரம்பகட்ட நோயறிதலுக்கும் உரிய நேரத்திலான மருத்துவத் தலையீட்டிற்கும் பெரும்பாலும் தடையாக அமைகின்றன. இதனை நிவர்த்தி செய்யும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக திட்டம், குறிப்பாகத் தற்போதுள்ள சுகாதார வசதிகளைப் போதுமானளவு பெறாத சமூகங்களை நோக்கி, பரிசோதனைச் சேவைகளை நேரடியாக மக்களிடம் கொண்டு செல்வதில் கவனம் செலுத்துகின்றது. இதுவரை எட்டப்பட்டுள்ள பெறுபேறுகளால் நாம் ஊக்கமடைந்துள்ளோம் என்பதுடன், எமது சேவைப் பரப்பளவை மேலும் விரிவுபடுத்துவதற்கும், அதிகளவான தனிநபர்கள் தமது ஆரோக்கியத்திற்குத் தாமே பொறுப்பேற்கும் வகையில் அவர்களை வலுவூட்டுவதற்கும், நீடித்த நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம்.” என்றார்.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய கூட்டுநிறுவனமான, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் (ஜேகேஎச்) அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. இது 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 80இற்கும் அதிகமான நிறுவனங்களைக் கொண்டு இயங்குகின்றது. அதன் அங்கத்துவ நிறுவனமாகத் திகழ்ந்து, துறையில் சுமார் நான்கு தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2026 செப்டெம்பர் மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 40.1 பில்லியனையும், ஆயுள் நிதியமாக ரூ. 106.5 பில்லியனையும் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (IRCSL) அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும்.