இன்றைய உலகில், எமது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையையும் துரிதமாக மாற்றியமைப்பதில் AI தொழினுட்பம் முக்கிய பங்காற்றுகின்றது. எமது நிதியை நாம் நிர்வகித்துக் கொள்வது முதல் எமது உளவியல் மற்றும் உடல்சார் நலனில் அக்கறை கொள்வது வரை அதன் செல்வாக்கு ஊடுருவியுள்ளது.
எமது தினசரி அனுபவங்களில் AI எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது மற்றும் எமது எதிர்காலத்தில் அதன் தாக்கம் எவ்வாறானதாக அமைந்திருக்கும் என்பதைப் பற்றி OCTAVE இன் பிரதம AI பொறியியலாளரான கலாநிதி சுமணரூபன் இராஜதுரை அவர்களுடன் யூனியன் அஷ்யூரன்ஸ் Circle of life நிகழ்ச்சியில் கலந்துரையாடப்பட்டது. இதில் அவர் பகிர்ந்து கொண்ட முக்கியமான விடயங்கள் இங்கு தரப்பட்டுள்ளன..
AI அறிமுகம்
எளிமையான சொற்களில், AI என்பது மனிதர்களைப் போல கற்றுக் கொள்ளவும், செயற்படவும் கூடிய ஆற்றல் வாய்ந்த நுண்ணறிவு இயந்திரங்கள் (Intelligent machines) ஆகும். மேலும் விளக்குவதானால், AI என்பது மிகப் பரந்துப்பட்ட தரவுகளிலிருந்து (data) தாமாகவே கற்று, அறிவையும் (knowledge) நுண்ணறிவையும் (intelligent) பெற்று, மனிதர்களைப் போன்று செயற்படக்கூடிய செயலிகள் எனலாம்.
இதற்கு சிறந்த உதாரணமாக ChatGPT ஐ குறிப்பிடலாம். உலகிலுள்ள சகல பத்திரிகைகள், புத்தகங்கள் மற்றும் இணையத்திலுள்ள சகல எழுத்துருசார் தரவுகளிலிருந்து கற்றுக்கொள்வதன் மூலமாக, இது அறிவையும் நுண்ணறிவையும் (ஒவ்வொரு வார்த்தையின் பொருள், வாக்கியங்களின் அமைப்பு, பல மொழிகள் – ஆங்கிலம், தமிழ், சிங்களம், ஜப்பானிய, பிரஞ்சு, முதலியன) பெற்றுக்கொள்ளுகின்றது. தற்போது அந்த அறிவு மற்றும் நுண்ணறிவைக் கொண்டு, நாம் ChatGPT ஐ பயன்படுத்தும் போது அது மனிதன் இயங்குவதைப் போல செயற்படுகின்றது.
AI தொழில்நுட்பம் இன்று பல துறைகளில், குறிப்பாக சுகாதாரம், மோட்டார் வாகனத்துறை, கல்வி, வங்கி மற்றும் சில்லறை விற்பனை போன்றவற்றில் முக்கிய பங்காற்றி, செயல்முறைகளை துரிதப்படுத்தி, திறன் மிகுந்த தீர்வுகளை வழங்குகிறது.
வாழ்வில் AI தாக்கம்
AI எவ்வாறு எமது நிதி (financial wellbeing), உளவியல் (emotional wellbeing) மற்றும் உடல்சார் (physical wellbeing) நலன்களில் தாக்கம் செலுத்துகின்றது என்பதைப் பார்ப்போம்.
நிதி நலன்
நிதி நலன் என்றால், நீண்ட கால நிதிப் பாதுகாப்பை (financial security) கருத்தில் கொண்டு உங்கள் பணத்தையும் வளங்களையும் எவ்வாறு பொறுப்புடன் நிர்வகிப்பது என்பதைக் கற்றுக்கொள்வது ஆகும். அதிகமாகச் செலவு செய்தல், சேமிக்காமல் இருப்பது, வரவு செலவுத் திட்டங்களைச் செய்யாமை, முதலீடு செய்யாமை, அவசர நிதி இல்லாதது (emergency fund), பொறுப்பற்ற முறையில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துதல் போன்றவை நிதி நலனை பாதிக்கும் செயற்பாடுகள் ஆகும். யதார்த்தத்தில், மக்களின் நிதிசார் அறிவு மிகவும் குறைந்தமட்டத்தில் காணப்படுகின்றது. உதாரணமாக, பிரித்தானியாவில் அண்மையில் மேற்கொண்டிருந்த ஆய்வின் பிரகாரம், சுமார் 11.5 மில்லியன் மக்கள் 100 பவுண்ஸ் (40,000 ரூபாய்) க்கும் குறைவான சேமிப்பையே வைத்துள்ளனர்.
நிதி நல்வாழ்வு மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது அவர்களின் ஒட்டுமொத்த மன மற்றும் உடல் ஆரோக்கியம் மற்றும் அவர்களது உறவுகளின் மீது சாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. AI ஐ நிதிசார் கட்டமைப்பில் பயன்படுத்தும் போது, அது நிதிசார் தரவுகளை ஆராய்ந்து, நுண்ணறிவைப் பெற்று, பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட ஒரு நிபுணத்துவமட்டத்தில் செயலாற்றக்கூடியது. உதாரணமாக, சிங்கப்பூரின் DBS வங்கி, AI ஐ பயன்படுத்தி, ஒவ்வொரு வாடிக்கையாளரினதும் ஆயிரக்கான தரவுகளை ஆராய்ந்து, எவ்வாறு அவர்களின் சேமிப்புகளை அதிகரிக்கலாம், அவர்களின் நிதி இலக்குகளை நிர்ணயிக்கலாம், எங்கு அவர்கள் முதலிடலாம் போன்ற ஆலோசனைகளை வழங்குகின்றது. இந்த AI மாதிரிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஏனையவர்களை விட 83 சதவீதம் அதிகமாக சேமிப்பதாகவும், நான்கு மடங்கு அதிகமாக முதலீடு செய்வதாகவும், இரண்டு மடங்கு அதிகமாக காப்புறுதி செய்து கொள்வதாகவும் தரவுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு AI மூலம், அவர்களின் நிதி நலன் மிகவும் மேம்படுகின்றது.
உளவியல் நலன்
உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) அறிக்கையின் பிரகாரம், உலகில் சுமார் 800 மில்லியன் மக்கள் மனநலப் பிரச்சனைகளுடன் வாழ்வதாகவும், ஒவ்வொரு வருடமும் ஏழு இலட்சத்துக்கு அதிகமான மக்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய பிராந்தியத்தில் தற்கொலை மிகவும் அதிகமாக உள்ள நாடாக இலங்கை உள்ளது.
தகைமை வாய்ந்த Cognitive Behavioral Therapist (CBT) ஒருவரை தேடிக் கொள்வது என்பது மிகவும் கடினமான காரியமாக அமைந்துள்ளது. மன அழுத்தம் மற்றும் அச்ச உணர்வு அதிகளவு காணப்படும், அசாதாரண நேரங்களில், உதாரணமாக இரவு 2 மணிக்கு கூட, சிலருக்கு உடனடி உதவியை தேவைப்படலாம். குறிப்பாக அபிவிருத்தியடைந்த நாடுகளில், சிகிச்சைகளுக்கு அதிகளவு செலவாகின்றமை ஒரு பிரச்சனையாக அமைந்துள்ளது. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலும் போதியளவு விழிப்புணர்வின்மை பிரச்சனையாக அமைந்துள்ளது. உளவியல் நிபுணர் ஒருவரை நாட முன்வராமையால், பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாகவே இந்த உளைச்சலுக்கு முகங்கொடுக்கும் நிலை உள்ளது.
வளர்ந்து வரும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க, ஆரோக்கியத்திற்காக செயற்கை நுண்ணறிவை (AI) அறிவியல் அடிப்படையிலான தத்தெடுப்பை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று WHO கூறுகிறது. AI இனால் வலுவூட்டப்பட்ட செயலிகளினால் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.
AI ஆளாக்கம் பெற்ற மனநல செயலிகள், உயர் தர நிபுணருக்கு இணையான சேவைகளை உதவி தேவையானவர்களுக்கு செலவு குறைவாக மற்றும் 24/7 அளிக்கின்றன. Together by Renee எனும் App இதற்கு ஒரு உதாரணமாகும். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் ஏற்கனவே AI ஆளாக்கம் பெற்ற மனநல செயலிகளைப் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
உடல்சார் நலன்
Apple Watch, Fitbit போன்ற அணியக்கூடிய சாதனங்களினூடாக உடலின் இதயத் துடிப்பு, குருதி அழுத்தம் போன்ற தரவுகளை சேகரித்து, அவற்றை AI மூலமாக ஆராய்ந்து, ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமான உடல்நலன் சார் ஆலோசனைகளை வழங்குகின்றன. இந்த செயலிகள், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உடல்சார் உபாதைகளை பல வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்கு முன்னதாக கண்டறிந்து, அது பற்றி மக்களுக்கு அறிவுறுத்தும் திறன் வாய்ந்தவை.
மருத்துவத்துறையில், AI மிக முக்கியமான பங்கு வகிக்க தொடங்கியிருக்கிறது. உதாரணமாக, AI உதவியுடன் செயல்படும் கருவிகள் மருத்துவர்களுக்கு புற்றுநோய் போன்ற நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய உதவி, நோயாளிகளின் சிகிச்சை பலன்களை கணிசமாக மேம்படுத்தி, மிகத்தரமான மருத்துவ சேவைகளை வழங்குகிறது. மருத்துவத்துறையில் AI பல விதமாக பயன்பாட்டை நிரூபித்து வருகிறது. எதிர்காலத்தில், இந்தத் துறையில் மேலும் பல புதிய உதாரணங்கள் உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது..
சிறுவர் விருத்தியில் AI இன் செல்வாக்கு
நலன்களில் AI பல்வேறு வழிகளில் தாக்கம் செலுத்த ஆரம்பித்துள்ள நிலையில், அடுத்த தலைமுறையினர் மத்தியில் அதன் செல்வாக்கு என்பது மிகவும் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமாக அமைந்துள்ளது.
சிறுவர்களின் வளர்ச்சியிலும், விருத்தியிலும் நேர்த்தியான மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. நேர்த்தியான விடயங்களை எடுத்துக் கொண்டால், AI தொழினுட்பத்தினூடாக அவர்களின் பயிலல் ஆற்றலை மேம்படுத்த முடியும். சிறுவர்களுக்கு ஆதரவாக AI இசைவாக்கமடைந்து உதவும் திறனை கொண்டுள்ளது. ஏனைய தொழினுட்பங்களைப் போன்று சிறுவர்கள் மத்தியில் எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடியது.
உணர்வுசார் விருத்தி :
AI ஐ சிறுவர்கள் அதிகமாக பயன்படுத்தினால், அவர்கள் AI தான் உலகம் எனும் நம்பும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மனிதர்களுக்கிடையிலான தொடர்புகளை கொண்டிருப்பதற்கு முக்கியத்துவமளிக்காது, AI தான் உலகம் என தீர்மானித்து, அதனுடன் தமது வாழ்க்கையை முன்னெடுக்கும் சூழல் உருவாக்கலாம்.
சிந்திக்கும் ஆற்றல் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் :
சிறுவர்களுக்கு சிந்திக்கும் ஆற்றலை பயிற்றுவிப்பது முக்கியமானதாகும். AI வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அவற்றை கேள்விக்குட்படுத்தவும், AI இனால் தயாரிக்கப்பட்ட பொருளடக்கத்தை மதிப்பாய்வு செய்யக்கூடியவர்களாகவும் அவர்கள் தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சமூக திறன்கள் :
அளவுக்கு அதிகமாக AI இல் தங்கியிருப்பது, சமூக திறன்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால், அவர்களின் சமூகத்திறன்கள், ஏனையோருடன் பழகுதல், ஏனையவர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளுதல், நண்பர்களை கொண்டிருப்பது, போன்ற திறன் விருத்திகள் பாதிக்கப்படலாம்.
கவனமான முறையில் AI இன் அனுகூலங்கள் மற்றும் பிரதிகூலங்களை சமநிலைப்படுத்துவதனூடாக, எதிர்கால சந்ததியினர் மத்தியில் நிதிசார், உடல்சார், உளசார் வளர்ச்சியை நேர்த்தியான முறையில் மேம்படுத்த முடியும்.
கவனமான முறையில் AI இன் அனுகூலங்கள் மற்றும் பிரதிகூலங்களை சமநிலைப்படுத்துவதனூடாக, எதிர்கால சந்ததியினர் மத்தியில் நிதிசார், உடல்சார், உளசார் வளர்ச்சியை நேர்த்தியான முறையில் மேம்படுத்த முடியும்.
AI இலுள்ள பிரச்சனைகள் மற்றும் அபாயங்களைக் குறைத்தல்
ஏனைய தொழினுட்பங்களைப் போன்று AI இலும் குறைபாடுகள் உள்ளன. அவற்றினூடாக சமூகப் பிரச்சனைகளும் எழுகின்றன. உதாரணமாக, AI பொய்யான தகவல்களை உண்மையானதைப் போல உருவாக்கி மக்களை தவறாக வழிநடத்தக்கூடியது. அண்மையில் ChatGPT நபர் ஒருவருக்கு மனைவியிடமிருந்து விவாகரத்தைப் பெறுமாறு அறிவுறுத்திய விடயம், உணவுத் தயாரிப்பு முறையை வழங்கும் போது, குளோரினைப் பாவித்து உணவை தயாரிக்குமாறு தெரிவித்திருந்தமை போன்றவற்றை குறிப்பிடலாம்.
மக்கள் பெருமளவு AI தொழினுட்பத்தை சார்ந்திருந்தால், அவர்கள் ஆக்கத்திறன், ஞாபகசக்தி போன்றவற்றை பயன்படுத்தாமல், AI இல் தங்கியிருக்கும் நிலை உருவாகலாம். இதற்கு மேலதிகமாக, AI பக்கசார்பாக இயங்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அரசியல் கட்சி சார்பாக, இன ரீதியாக அல்லது மொழி ரீதியாக பக்கசார்பாக இயங்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.
மற்றுமொரு பெரும் பிரச்சனையாக AI ஐ பயன்படுத்தி போலியான வீடியோக்கள் அல்லது ஓடியோக்களை (உதாரணம் – deepfakes) உருவாக்க முடியும். இது வளர்ந்து வரும் பிரச்சனையாக உள்ளது. AI பயன்படுத்தி தயாரிக்கப்படும் இவ்வாறான வீடியோக்கள் மற்றும் ஓடியோக்கள் உண்மையான மனிதரைப் போலவே அமைந்திருக்கின்றன. அதை பார்ப்பவர்களும், கேட்பவர்களும் உண்மையாகவே அந்த நபரே செயற்படுவதாக கருதும் நிலை ஏற்படுகின்றது.
மிக அபாயகரமான பிரச்சனையாக, AI மனித ஆற்றலை முந்தி அவர்களை கட்டுப்படுத்தக்கூடிய நிலைக்கு வருமா எனும் ஒரு கேள்வி நிலவுகின்றது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்ற ஜெப்ரி ஹின்டன் 40 வருட காலமாக AI தொழினுட்பம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளார். அடுத்த 20 வருடங்களினுள் AI என்பது மனிதர்களை விட மிகவும் மதிநுட்பத்திறன் படைத்ததாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என எச்சரிக்கிறார். இவ்வாறு நடக்குமானால், இது மனித குலத்தை இல்லாமல் செய்யக்கூடிய நிலைக்கு வரக்கூடும் என்பது அவரின் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
இதற்க்கு தீர்வாக, ஐக்கிய நாடுகள் அமைப்புகள் போன்ற சர்வதேச அமைப்புகள் இணைந்து AI ஐ பயன்படுத்துவதற்கான ஒழுக்க நெறிமுறைகள் (ethical guidelines), சிறந்த செயற்பாடுகள் (best practices) மற்றும் வழிகாட்டல்களை (guides) உருவாக்க வேண்டும். இதனூடாக முன்னேற்றங்கள் வரலாம். அரசாங்கங்களும் சட்டங்களை இயற்றிய வண்ணமுள்ளன. அணு ஆயுதங்கள், இரசாயனவியல் ஆயுதங்களை அல்லது உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு உலக நாடுகளுக்கிடையே உள்ள ஒப்பந்தங்களைப் போன்று, AI தொழினுட்பத்தை பயன்படுத்துவது மற்றும் கட்டுப்பத்துவது தொடர்பில் உலக நாடுகளுக்கிடையே ஒரு உடன்படிக்கை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது எலன் மஸ்க் மற்றும் ஜெப்ரி ஹின்டன் போன்ற நிபுணர்களின் பரிந்துரையாக அமைந்துள்ளது.
இறுதிக் குறிப்புகள்
எமது நிதிசார், உளவியல்சார் மற்றும் உடல்சார் நலன்களை மேம்படுத்தும் ஆற்றலை AI பெருமளவில் கொண்டுள்ளது. எவ்வாறாயினும், அதில் காணப்படும் அனுகூலங்கள் மற்றும் பிரதிகூலங்களை ஆராய்ந்து சமநிலைப்படுத்திக் கொள்ள வேண்டியது அத்தியாவசியமானதாகும். பொறுப்பு வாய்ந்த பாவனையை ஊக்குவிப்பது, ஆழமாக சிந்தித்தலை ஊக்குவித்தல் மற்றும் ஒழுக்கமான செயற்பாட்டு நெறிகளை (ethical guidelines) நடைமுறைப்படுத்தல் போன்றவற்றினூடாக, AI இன் உச்ச பலனைப் பெற்றுக்கொள்ள முடியும்.