சுகாதார அமைச்சு, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் செய்கடமை ஆகியவற்றுடன் இணைந்து கொவிட்-19 பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க முன்வந்துள்ளதாக யூனியன் அஷ்யூரன்ஸ் அறிவித்துள்ளது. பொது-தனியார் பங்குடமையாக முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளில் வைரஸ் தொற்றுப் பரவல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் எமது மக்களின் சுகாதாரம் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு ஏற்படக்கூடிய தடைகளை தவிர்த்துக் கொள்வதற்கான முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றன அடங்கியிருக்கும்.
தொற்றுப் பரவல் தொடர்பில் பொது மக்கள் மத்தியில் போதியளவு விழிப்புணர்வின்மை மற்றும் தொற்றுப் பரவலின் போது அதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அவர்களின் பண்புகள், செயற்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டிருந்தது. போதியளவு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் அறிவூட்டுவதற்கு பரிபூரண பொதுச் சுகாதார கல்வியறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டம் அவசியமானதாக அமைந்துள்ளது.
ஒக்டோபர் 19 ஆம் திகதி முதல் விழிப்புணர்வுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. “பாதுகாப்பின் பொறுப்பை நிறைவேற்றுவோம்” எனும் தகவலுடன், பொது மக்கள் மத்தியில் தம்மையும், ஏனையவர்களையும் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டிருந்தது. டிஜிட்டல் ஊடகத்தில் வீடியோக்கள் மற்றும் பதிவுகள் போன்றன வெளிப்படுத்தப்பட்டிருந்ததுடன், பாரம்பரிய ஊடகங்களான தொலைக்காட்சி மற்றும் வெளிக்கள ஊடக கட்டமைப்புகளிலும் அவை ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் இந்தப் பங்காண்மை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், “கொவிட்-19 தொற்றுப் பரவலிலிருந்து பாதுகாப்பை வழங்கும் தேசிய செயற்பாடுகளுக்கு நாம் எமது உறுதியான பங்களிப்பை வழங்குகின்றோம். இந்த சந்தர்ப்பத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்த தேசிய நடவடிக்கைக்கு பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மைக் குடிமகன் எனும் வகையில் பங்களிப்பு வழங்க வேண்டியது எமது கடமையாக அமைந்துள்ளது. நாட்டின் சகல பாகங்களுக்கும் இந்த தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான தகவலை கொண்டு செல்ல நாம் எதிர்பார்க்கின்றோம். அதனூடாக சமூகத்தில் இந்த தொற்றுப் பரவலின் தாக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்வது எமது எதிர்பார்ப்பாகும்.” என்றார்.
இதர சுவாசத் தொகுதியுடன் தொடர்புடைய தொற்றுக்களான தடிமன் அல்லது காய்ச்சல் போன்றவற்றுடன், தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதில் பொதுச் சுகாதார நடவடிக்கைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தன. இவ்வாறான செயற்பாடுகளில், சுகயீனம் ஏற்பட்டால் வெளியே செல்லாது வீட்டில் இருத்தல், இருமல் மற்றும் தும்மும் போது வாய் மற்றும் மூக்கை டிஷு கொண்டு அல்லது முழங்கையை மடித்து மறைத்துக் கொள்ளுதல், பயன்படுத்திய பின்னர் குறித்த டிஷுவை பாதுகாப்பான வகையில் கழிவகற்றிக் கொள்ளல், நீர் மற்றும் சவர்க்காரம் கொண்டு கைகளைக் கழுவிக் கொள்ளல் மற்றும் அடிக்கடி தொடுகைக்குட்படும் பகுதிகளை சுத்தம் செய்தல் போன்றன அடங்குகின்றன. தம்மையும், சமூகத்தின் ஏனையவர்களுக்கு பொறுப்பான வகையிலும் பாதுகாப்பாக இருப்பது தொடர்பில் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்தத் திட்டத்தின் இலக்காகும்.