Preloader images
Preloader icon

இலங்கை காப்புறுதித் துறையில் கவர்ச்சிகரமான வெகுமதிகளை வழங்கும் மாபெரும் திட்டமான யூனியன் அஷ்யூரன்ஸ் ப்ரீமியர் க்ளப், அதன் சிறந்த செயற்பாட்டாளர்களை கௌரவிக்கும் நிகழ்வை 2021 நவம்பர் 7 ஆம் திகதி கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தது. உலகத் தரம் வாய்ந்த விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவையை வெளிப்படுத்தியிருந்த கம்பனியின் காப்புறுதி ஆலோசகர்களை கௌரவிக்கும் வகையில் இந்தக் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் அஷ்யூரன்ஸ் ப்ரீமியர் க்ளப்பைச் சேர்ந்த சிறந்த செயற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துகள். எமது செயலணியினரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதிலும், வாடிக்கையாளரை மையப்படுத்திய சேவைகளை வழங்குவதிலும் நாம் கவனம் செலுத்தும் நிலையில், தொழிற்துறையில் எமது முதல் தொகுதி சாதனையாளர்கள் தமது நாமத்தை பதிவு செய்துள்ளதைக் காண்பதையிட்டு நான் மிகவும் பெருமை கொள்கின்றேன்.” என்றார்.

கௌரவிக்கப்பட்ட சாதனையாளர்களுக்கு பரந்தளவு வாழ்க்கை முறை மற்றும் வியாபார ஊக்குவிப்பு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட அனுகூலங்களில் கம்பனியினால் எரிபொருள் வழங்கப்பட்டு பராமரிக்கப்படும் சொகுசு வாகனம் மற்றும் பண வெகுமதிகள் போன்றன அடங்கியிருந்தன.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம விநியோக அதிகாரி செனத் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் அஷ்யூரன்ஸ் ப்ரீமியர் க்ளப் என்பது, சிறந்த சாதனைகள் மற்றும் உயர் வாடிக்கையாளர் சேவை மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய விற்பனைகள் போன்றவற்றை வெளிப்படுத்தும் ஆயுள் காப்புறுதி முகவர்களைக் கொண்ட உயர் க்ளப் ஆகும். ஆயுள் காப்புறுதித் துறையில் வழங்கப்படும் மிகவும் சிறந்த வெகுமதித் திட்டத்தினூடாக இந்த உலகத் தரம் வாய்ந்த விற்பனை அணிக்கு இந்த வெகுமதிகளை வழங்குவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். வியாபாரம் எனும் வகையில், எமது பிரதான இலக்கு என்பது, நாட்டினுள் ஆயுள் காப்புறுதியை வியாபிக்கச் செய்து, இலங்கையர்களின் கனவுகளை நனவாக்க பங்களிப்பு வழங்குவதாகும். இந்த கனவை நனவாக்கிடும் வகையில் எமது முன்னணி முகவர்கள் தமது பங்களிப்பை வழங்குவார்கள்.” என்றார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் ப்ரீமியர் க்ளப் சாதனையாளர்களில்: உபுல் பிரியந்த, சாமர மென்டிஸ், ஹேரத் முதியன்செலாகே, சானக அப்புஹாமி, சந்துன் சிறிவர்தன, மலிந்த குருசிங்க, அமில ஹர்ஷன, நயோமி மீகஹாபொல, தரிந்து குருப்பு, ஜீவன் விஜேகோன், சுரேஷ் பண்டார, குமாரசிறி ராமநாயக்க, மஹேஷி பெர்னான்டோ, உபாலி விஜேசூரிய மற்றும் ரொஹான் விஜேவர்தன ஆகியோர் அடங்கியுள்ளனர். இந்த 16 அங்கத்தவர்களும் Million Dollar Round Table (MDRT) க்கு தகைமை பெற்றுள்ளனர்.

உயர்தர வாடிக்கையாளர் தேவை மதிப்பாய்வுகள் மற்றும் சேவை விநியோகத்தை ஊக்குவிக்கும் வகையில் யூனியன் அஷ்யூரன்ஸ் ப்ரீமியர் க்ளப் அமைந்துள்ளதுடன், வாடிக்கையாளர்களின் கொள்வனவு மற்றும் பாவனையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களை மையப்படுத்திய காப்புறுதி ஆலோசனை சேவை என்பது இலங்கையர்களின் எதிர்பார்ப்புகளையும், வாழ்க்கைமுறை கனவுகளையும் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றும் என்பதில் நிறுவனம் உறுதியான நம்பிக்கையை கொண்டுள்ளது.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 16.6 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 45.3 பில்லியனையும், 2021 ஜுன் மாதமளவில் மூலதன போதுமை விகிதமாக (CAR) 300% ஐக் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. 76 கிளைகளினூடாக 3000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளதுடன், மாற்றமடைந்து வரும் ஆயுள் காப்புறுதித் துறையில் கவனம் செலுத்துகின்றது.