Preloader images
Preloader icon

இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ், கைரானகம வித்தியாலயத்துக்கு இசைக் கருவிகளை நன்கொடையாக வழங்கியிருந்தது. பாடசாலையின் நாடக ஆசிரியர் புத்திமா அபேசிங்கவின் அயராத முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த நன்கொடையை வழங்கியிருந்தது. நாடகப் பாடத்தை அறிமுகம் செய்வதில் அபேசிங்க ஆசிரியரின் அர்ப்பணிப்பினூடாக, மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடத் தெரிவுகள் விஸ்தரிக்கப்பட்டிருந்ததுடன், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் சிறந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது.

2016 ஆம் ஆண்டில் பாடசாலையில் அவர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, பாடசாலையில் கலை தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட பாடத் தெரிவுகள் நிலவுவதை அவதானித்திருந்தார். பல சவால்களுக்கு மத்தியிலும், மாணவர்களுக்காக நாடகப் பாடத்தை அறிமுகம் செய்வதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார். இவரின் அயராத முயற்சி, அணியினரின் ஆதரவுடன் கைரானகம வித்தியாலயத்தின் இளம் திறமைசாலிகளுக்கு பல்வேறு கௌரவிப்புகளை பெற்றுக் கொடுக்க முடிந்திருந்தது. சிறந்த கதை, சிறந்த நாடகம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகை போன்ற விருதுகளை பிராந்திய மற்றும் மாவட்ட போட்டிகளில் வெற்றியீட்ட முடிந்தது.

இந்த மாணவர்களின் திறமைகளையும், ஆசிரியரின் ஈடுபாட்டையும் கவனத்தில் கொண்டு, யூனியன் அஷ்யூரன்ஸ் பல்வேறு இசைக் கருவிகளை கைரானகம வித்தியாலயத்துக்கு நன்கொடையாக வழங்க தீர்மானித்தது. இந்த நன்கொடையினூடாக, மாணவர்களுக்கு அவசியமான வளங்களை பெற்றுக் கொள்ள முடிவதுடன், தமது திறமைகளை மேம்படுத்தி வினைத்திறனை அதிகரித்துக் கொள்வதற்கும் உதவியாக அமைந்திருக்கும்.

அபேசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “எமது மாணவர்கள் பல்வேறு திறமைகளை கொண்டிருந்தனர் என்பது புலப்பட்டது. நான் ஒரு நேர்த்தியான பங்களிப்பு வழங்குபவராக மாத்திரம் திகழவே எதிர்பார்த்ததுடன், அவர்களின் திறமைகளை வெளிக் கொணர உதவியிருந்தேன். அத்தியாவசியமான நிலவிய தேவையை இனங்கண்டு பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை குடிமகனான முன்வந்து மாணவர்களுக்கு இந்த இசைக் கருவிகளை அன்பளிப்பு செய்துள்ளமைக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். எதிர்காலத்தில் அவர்களுக்கு சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்த இந்த கருவிகள் உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், பாடசாலைக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கும்.” என்றார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி மஹேன் குணரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “சகல சந்தர்ப்பங்களிலும் இலங்கையர்களின் முன்னேற்றத்துக்கு ஆதரவளிப்பது என்பது யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த எமது எதிர்பார்ப்பாகும். அதன் அடிப்படையில், அபேசிங்க ஆசிரியரின் நிலையை நாம் இனங்கண்டிருந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இவரின் கதை எம் அனைவருக்கும் முன்மாதிரியான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. சவால்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு மத்தியில், மாணவர்களுக்காக கலை மற்றும் நாடகத்தை பயில்வதை சாத்தியப்படுத்தியிருந்தார். அவரைப் போன்ற சிறந்த ஆசிரியர்கள் மாணவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.” என்றார்.

இந்தத் திட்டத்தில் அங்கம் வகிப்பதையிட்டு நிறுவனம் பெருமை கொள்வதுடன், சகல சமூகங்களினதும் நலன் மற்றும் ஒட்டுமொத்த அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும். கல்வியின் மாற்றியமைப்பு சக்தி என்பதில் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதுடன், கைரானகம வித்தியாலயத்தின் மாணவர்களின் தொடர்ச்சியான வெற்றி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை காண்பதற்கு எதிர்பார்த்துள்ளது.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2023 ஜுன் மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 18.0 பில்லியனையும், ஆயுள் நிதியமாக ரூ. 60.4 பில்லியனையும் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 4,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.