Preloader images
Preloader icon

இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகளை வழங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், அதன் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியாக, செனத் ஜயதிலகவை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. 2023 ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த நியமனத்துக்கு முன்னர், நிறுவனத்தின் பிரதம விநியோக அதிகாரியாக இவர் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2007 ஆம் ஆண்டில் ஜோன் கீல்ஸ் குழுமத்துடன் இணைந்து கொண்டதுடன், 2019 ஆம் ஆண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கொள்வதற்கு முன்னதாக, ஜோன் கீல்ஸ் லொஜிஸ்டிக்ஸ் (பிரைவட்) லிமிடெட் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றியிருந்தார். ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சிரேஷ்ட உப தலைவராக இவர் திகழ்வதுடன், பதினைந்து வருடங்களுக்கு மேலாக, கூட்டாண்மை முகாமைத்துவ அனுபவத்தை இவர் தம்வசம் கொண்டுள்ளார். நொட்டிங்ஹம் (UK) பல்கலைகழகத்தின் நிதியியல் மற்றும் கணக்கீடு ஆகியவற்றில் முதுமாணிப் பட்டத்தை இவர் கொண்டுள்ளதுடன், முகாமைத்துவ கணக்கீட்டு பட்டையக் கல்வியகத்தின் அங்கத்துவத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முதுமாணிப் பட்டத்தையும் கொண்டுள்ளார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “செனத் தம் வசம் உறுதியான அனுபவத்தையும், ஆற்றலையும் கொண்டுள்ளதுடன், நிறுவனத்துக்கு பெறுமதியான பங்களிப்பையும் வழங்கக்கூடியவர். புதிய பதவியில் அவர் சிறப்பாக செயலாற்றுவதற்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த தலைமைத்துவ நியமனத்துடன், நிறுவனத்தினால் அதன் வளர்ச்சியை நோக்கி துரிதமாக நகரக்கூடியதாக இருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், எதிர்வரும் ஆண்டில் மேலும் சிறந்த சாதனைகளை பதிவு செய்யக்கூடியதாக இருக்கும் எனவும் கருதுகின்றோம்.” என்றார்.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 16.6 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 54.7 பில்லியனையும், 2022 செப்டெம்பர் மாதமளவில் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 4000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.