இலங்கையில் முதல் தர பாங்கசூரன்ஸ் சேவை வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, உண்மையில் இலங்கையின் வங்கியான பான் ஏசியா வங்கியுடன் கைகோர்த்துள்ளது. இந்தக் கைகோர்ப்பினூடாக, நாட்டில் பாங்கசூரன்ஸ் சேவையை மேலும் விஸ்தரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இலங்கையின் நுகர்வோருக்கு தொடர்ச்சியாக புரட்சிகரமான வங்கியியல் வாடிக்கையாளர் தீர்வுகளை பான் ஏசியா வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்தப் பங்காண்மையினூடாக, சிறந்த காப்புறுதித் தீர்வுகள் வழங்கப்படும் என்பதுடன், இவற்றில் சேமிப்பு, பாதுகாப்பு மற்றும் முதலீடு போன்றவற்றுடன், பரிபூரண நிதித் தீர்வுகள் அடங்கியிருக்கும். இந்தப் பங்காண்மையில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் மற்றும் பான் ஏசியா பாங்கிங் கோர்பரேஷன் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நிமல் திலகரட்ன ஆகியோர் 2022 ஜுன் 21 ஆம் திகதி கொழும்பிலுள்ள வங்கியின் தலைமையகத்தில் கைச்சாத்திட்டனர்.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “இந்தப் பங்காண்மை மிகவும் முக்கியமானது. இலங்கையில் பாங்கசூரன்ஸ் பிரசன்னத்தை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக அமைந்திருக்கும். பான் ஏசியா வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு புதிய தலைமுறை காப்புறுதி அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்க இந்த பங்காண்மை உதவியாக அமைந்திருக்கும். பான் ஏசியா வங்கியுடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இந்த தந்திரோபாய பங்காண்மையினூடாக பரஸ்பர அனுகூலத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு வழிகோலப்படும் என்பதுடன், நிலைபேறான வியாபார வளர்ச்சியை எய்தக்கூடியதாக இருக்கும்.” என்றார்.
ஜுட் கோம்ஸ் மேலும் தெரிவிக்கையில், “பாங்கசூரன்ஸ் என்பது தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வரும் பிரிவு என்பதுடன், ஒப்பற்ற வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதாக அமைந்துள்ளது. சேவைச் சிறப்பு, புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் தலைமைத்துவம் போன்றவற்றைக் கொண்ட பாங்கசூரன்ஸ் ஊடாக, பாதுகாப்பு இடைவெளியை குறைத்துக் கொள்வதற்கும், இலங்கையர்களின் கனவுகளுக்கு வலுச் சேர்க்கவும் முடியும் என நம்புகின்றேன்.” என்றார்.
பான் ஏசியா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நிமல் திலகரட்ன இந்தப் பங்காண்மை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் அஷ்யூரன்ஸ் உடன் இந்த முக்கியத்துவம் வாய்ந்த பங்காண்மையில் கைச்சாத்திடுவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இதனூடாக வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட கால அடிப்படையிலான பாதுகாப்பையும் வலுவூட்டலையும் எம்மால் வழங்கக்கூடியதாக இருக்கும். இந்த உறுதியற்ற நெருக்கடி நிறைந்த காலப்பகுதியில், பாதுகாப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் முக்கியமானதாகும். இலங்கையர்களுக்கு நிதிச் சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதில் 27 வருட கால அனுபவத்தைக் கொண்ட வங்கி எனும் வகையில், எமது புத்தாக்கமான மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய பெறுமதி சேர்ப்பு அம்சங்களை இது மேலும் மேம்படுத்துவதாக அமைந்திருக்கும் என நாம் கருதுகின்றோம்.” என்றார்.
இந்தக் கைகோர்ப்பினூடாக பான் ஏசியா வங்கி வாடிக்கையாளர்களுக்கு தமது வங்கியியல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதுடன், புத்தாக்கமான காப்புறுதி தீர்வுகளை இலகுவாக அணுகிப் பெற்றுக் கொள்ள முடியும். நாட்டில் காணப்படும் வேகமாக வளர்ந்து வரும் வணிக வங்கிகளில் ஒன்றாக அமைந்துள்ள பான் ஏசியா வங்கி, அதன் புத்தாக்கமான வங்கியியல் தீர்வுகள் மற்றும் சேவைகளுக்காக புகழ்பெற்றுள்ளது. வங்கி தொடர்ச்சியாக உறுதியான இலாபப் பெறுமதிகளை பதிவு செய்வதுடன், துறையின் உயர்ந்த ஸ்தானத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. தேசத்தின் உண்மையான இலங்கையின் வங்கியான பான் ஏசியா வங்கி தனது வினைத்திறன் மற்றும் நிலைபேறாண்மைக்காக, தொடர்ச்சியாக பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகளையும் கௌரவிப்புகளையும் பெற்றுள்ளது.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம பாங்கசூரன்ஸ் அதிகாரி விந்தியா கூரே மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “பான் ஏசியா வங்கியுடன் கைகோர்க்க முடிந்தமை உண்மையில் பெருமைக்குரிய விடயமாகும். பாங்கசூரன்ஸ் பிரிவில் முன்னிலையில் திகழ்வதற்கும், வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி சேர்ப்பதற்கும் இந்த பங்காண்மை மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கும். இலங்கையின் பாங்கசூரன்ஸ் பிரிவில் நாம் கொண்டுள்ள அனுபவத்துடன், டிஜிட்டல் ஆற்றல்களினூடாக எம்மால் வாடிக்கையாளர்களுக்கு தமது நிதி மற்றும் பாதுகாப்பு தேவைகளை ஒரே கூரையின் கீழ் நிவர்த்தி செய்து கொள்ளக்கூடிய வசதியை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.” என்றார்.
இலங்கையின் முன்னணி பாங்கசூரன்ஸ் சேவை வழங்குநராக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. ஒன்பது முன்னணி வங்கிப் பங்காளர்களின் 600 க்கும் அதிகமான வங்கிக் கிளைகளுடனான பங்காண்மைகளினூடாக பரந்தளவு பாங்கசூரன்ஸ் வலையமைப்பைக் கொண்டுள்ளது. கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 17.9 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 49.7 பில்லியனையும், 2022 மார்ச் மாதமளவில் முதலீட்டு இலாகாவாக ரூ. 58.5 பில்லியனைக் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், பல வருடங்களாக தொடர்ச்சியாக Great Place to Work© இனால் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனமாக தரப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளதுடன், இலங்கையில் மில்லியன் டொலர் வட்ட மேசையில் (MDRT) முதல்தரத்தில் திகழ்கின்றது.
படம்: இடமிருந்து, ஹெசித் தசநாயக்க – நாளிகை தலைமை அதிகாரி – பாங்கசூரன்ஸ், யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, விந்தியா கூரே – பிரதம பாங்கசூரன்ஸ் அதிகாரி – யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, ஜுட் கோம்ஸ் – பிரதம நிறைவேற்று அதிகாரி, யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, பான் ஏசியா வங்கி முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நிமல் திலகரட்ன, பான் ஏசியா வங்கி பிரதம செயற்பாட்டு அதிகாரி நலீன் எதிரிசிங்க, பான் ஏசியா வங்கி லீசிங் மற்றும் நுகர்வோர் கடன்கள் பிரிவின் உதவி பொது முகாமைமயாளர் சியான் பெரேரா மற்றும் பான் ஏசியா வங்கி – கிளை கடன்கள் நிறைவேற்று அதிகாரி ரிவினுவன் உடகே ஆகியோர் உடன்படிக்கையை பரிமாறிக் கொள்கின்றனர்.