Preloader images
Preloader icon

இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ், தனது HOPE முன்னெடுப்பினூடாக, சமூக நலனை மேம்படுத்துவதில் தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. தேசம் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முனைப்புடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தூய குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் மாதவிடாய் காலப்பகுதியில் தூய்மையாக திகழ்வதற்கு அவசியமான தயாரிப்புகளை பெற்றுக் கொடுத்தல் போன்றவற்றுக்கான அவசரத் தேவையை கவனத்தில் கொண்டு யூனியன் அஷ்யூரன்ஸ், இலாப நோக்கற்ற அமைப்பான “கட்டு கம்பி” மையத்துடன் கைகோர்த்து, வறுமையான பாடசாலை மாணவர்கள் மத்தியில் தூய குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்திருந்தது.

இந்தத் திட்டத்தின் முதல் கட்டம் பொலன்னறுவை அலுத்வெவ மகா வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. பாடசாலைக்கு நவீன வசதிகள் படைத்த குடிநீர் வடிகட்டல் கட்டமைப்பை நிறுவி கையளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கட்டத்தின் கீழ், பொலன்னறுவையில் மேலும் ஐந்து பாடசாலைகளில் நீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை யூனியன் அஷ்யூரன்ஸ் புனருத்தாரணம் செய்து கையளித்திருந்தது. இதில், லக்ஷ்உயன வித்தியாலயம், ஹிங்குரக்தமன மகா வித்தியாலயம், சாந்தி மகா வித்தியாலயம், கிரிமெட்டிய மகா வித்தியாலயம் மற்றும் விஜயராஜ மகா வித்தியாலயம் ஆகியன அடங்கியிருந்தன.

மேலும், பாடசாலை பைகள் மற்றும் ரீ-சேர்ட்கள் அடங்கலாக, 6 மாதங்கள் வரை பயன்படுத்த போதுமான மாதவிடாய் தூய்மை துவாய்களை யூனியன் அஷ்யூரன்ஸ் விநியோகித்திருந்தது. இந்த இணைந்த முயற்சிகளினூடாக, பொலன்னறுவையைச் சேர்ந்த 1000 பாடசாலை மாணவர்களுக்கு நேர்த்தியான பங்களிப்பை வழங்கியிருந்ததுடன், அவர்களின் கல்விப் பயணத்துக்கும் ஆதரவளித்திருந்தது.

HOPE முன்னெடுப்பினூடாக சமூக நலனை மேம்படுத்துவதில் யூனியன் அஷ்யூரன்ஸ் காண்பிக்கும் அர்ப்பணிப்பு உறுதியாக முன்னெடுக்கப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டில், மருத்துவத்துறையில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவிய காலகட்டத்தில் நிறுவனம் தனது ஊழியர்களின் பங்களிப்புகளினூடாக, அத்தியாவசிய மருந்துப்பொருட்களை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்திருந்தது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம மக்கள் அதிகாரி இம்தியாஸ் ஆனிஃவ் கருத்துத் தெரிவிக்கையில், “மக்களுக்கு ஆதரவளிப்பதற்கான எமது அர்ப்பணிப்பு, நிறுவனசார் வரையறைகளுக்கு அப்பால் நீடிக்கப்பட்டதாக அமைந்துள்ளது. HOPE திட்டத்தினூடாக சமூகத்தின் சகல மட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் வளமூட்டுவதில் காண்பிக்கும் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எமது முயற்சிகளினூடாக, நேர்த்தியான மாற்றங்களை நாம் அவதானிப்பதுடன், பேணிப் பாதுகாப்பது என்பதில் அக்கறை கொண்டுள்ளோம். சமூகத்தில் நீண்ட கால அடிப்படையில் மேம்பாட்டுக்கு பங்களிப்பு வழங்குவது தொடர்பான எமது உள்ளக கொள்கைகளையும், நம்பிக்கையையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த அர்ப்பணிப்பு அமைந்துள்ளது.” என்றார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி மஹேன் குணரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “மனித முன்னேற்றத்துக்கு வலுவூட்டக்கூடிய சகல வழிமுறைகளுக்கும் பங்களிப்பு வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தை யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நாம் புரிந்து கொண்டுள்ளோம். ஒவ்வொரு ஆண்டும், அதிகளவு கவனம் செலுத்தப்படாத, பாரிய சமூக பிரச்சனைகளை தீர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்துகின்றோம். சமூகத்தில் தேவைகளை கொண்டிருப்பவர்களுக்கு அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்துவதில் எமது அர்ப்பணிப்புடன் இணைந்ததாக இது அமைந்துள்ளது. சமூகத்தில் சக்தி வாய்ந்த மாற்றங்களை ஏற்படுத்துவதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், HOPE போன்ற முன்னெடுப்புகளினூடாக நேர்த்தியான மாற்றத்தை ஏற்படுத்தவும், அடுத்த தலைமுறையினரின் பிரகாசமான எதிர்காலத்துக்கு பங்களிப்பு வழங்கவும் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2023 செப்டெம்பர் மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 23.9 பில்லியனையும், ஆயுள் நிதியமாக ரூ. 63.9 பில்லியனையும் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 4,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.