Preloader images
Preloader icon

இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ், தனது தேசிய வியாபார அறிமுகத்தை அண்மையில் முன்னெடுத்திருந்தது. இதன் போது, 2022ஆம் ஆண்டில் சிறப்பாக செயலாற்றியிருந்த தமது ஊழியர்களை கௌரவித்திருந்தது. இந்நிகழ்வில், விருதுகள் பெறுவோர், ஊழியர்கள் மற்றும் சிரேஷ்ட தலைமைத்துவத்தைச் சேர்ந்தவர்கள் என ஆயிரக் கணக்கானவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்வு, கொழும்பு தாமரைத் தடாக மஹிந்த ராஜபக்ச அரங்கில் கோலாகலமாக இடம்பெற்றது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி செனத் ஜயதிலக ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர். முன்னைய ஆண்டில் அணியினரின் சிறப்பான செயற்பாட்டை பாராட்டியிருந்தனர். 2023 ஆம் ஆண்டுக்கான தொனிப்பொருளான “உயர்ந்த, வேகமான, உறுதியான” (‘Higher, Faster, Stronger,’) என்பதையும் அவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.

ஜுட் கோம்ஸ் தமது உரையில் தெரிவிக்கையில், “கடந்த ஆண்டில் எமது வெற்றிகரமான செயற்பாடு என்பது, எமது விற்பனை செயலணியின் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டினூடாக வழிநடத்தப்பட்டிருந்தது. இதற்கு சகல பிரிவுகளின் ஆதரவும் கிடைத்திருந்தது. அவர்களின் சிறந்த சாதனைகள் தொடர்பில் நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். 2023 ஆம் ஆண்டுக்கான எமது தொனிப் பொருளாக “உயர்ந்த, வேகமான, உறுதியான” (‘Higher, Faster, Stronger,’) என்பது அமைந்திருப்பதுடன், தொழிற்துறையில் தொடர்ந்தும் முன்னேற்றத்தை எய்த எம்மை ஊக்குவிக்கின்றது. எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு சிறந்த சேவைகளை வழங்க நாம் எம்மை அர்ப்பணித்துள்ளதுடன், எமது ஊழியர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்தும் முதலீடுகளை மேற்கொள்கின்றோம்.” என்றார்.

செனத் ஜயதிலக குறிப்பிடுகையில், “ஒரு நபரால் தனித்து மாத்திரம் வெற்றியை எய்திவிட முடியாது. ஆனாலும், அணியினரால் திரண்ட முயற்சியினூடாகவே அதனை எய்தக்கூடியதாக இருக்கும். அணியினரின் வெற்றிகரமான செயற்பாடுகள் தொடர்பில் நான் பெருமை கொள்வதுடன், சகல வெற்றியாளர்களுக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். எம்மிடம் சரியான அணி, சரியான தந்திரோபாயம் மற்றும் சரியான சாதனங்கள் போன்றன காணப்படுவதுடன், இந்த ஆண்டுக்காக எமது இலக்குகளை எய்துவதற்காக ஒன்றிணைந்து பயணிக்கின்றோம். புத்தாக்கம், தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை மற்றும் ஊழியர் அபிவிருத்தி போன்றவற்றில் நாம் கவனம் செலுத்துவதனூடாக, போட்டியாளர்களை விட உயர்ந்த நிலையில் திகழ உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு உயர் பெறுமதிகளை பெற்றுக் கொடுக்க ஏதுவாக இருக்கும்.” என்றார்.

நிகழ்வின் பிரதான அம்சங்களில், 2022 ஆம் ஆண்டுக்கான 236 Million Dollar Round Table (MDRT) தகைமையாளர்கள், 19 Court of the Table (COT) தகைமையாளர்கள் மற்றும் 2 2 Top of the Table (TOT) தகைமையாளர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தமை அடங்கியிருந்தன. ஆயுள் காப்புறுதித் துறையில் மிகவும் பெருமைக்குரிய விருதுகளாக இவை அமைந்திருப்பதுடன், சிறப்பை நோக்கிய சிறந்த செயற்பாட்டாளர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளன.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 16.4 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 54.9 பில்லியனையும், 2022 டிசம்பர் மாதமளவில் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 4000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.