காப்புறுதியின் முக்கியத்துவம்
நாளெலாம் தொழில்செய் மாந்தர்
நலமிகு வாழ்வை வாழ
ஊளையும் நலியச் செய்து
உஞற்றுவார் நன் முயற்சி
பாழுறச் செய்ய ஆங்கே
பலவித துயரங் கூடில்
வாழ்ந்திடும் வழியைத் தேடி
வாட்டமே கொள்வா ரன்றோ
பொருள் இலார்க் கிவ்வுலகம்
சுகிப்பது இல்லை யென்று
பொய்யா மொழிப் புலவன்
புகன்றிட்டான் திருக் குறளில்
பொருளினைச் பேணும் வழியோ
அறமொடு இருத்தல் வேண்டும்
சேமிப்பு, ஈட்டல், தானம்,
காப்பென செய்தல் நன்றே.
சேர்த்திடும் பொருளை நான்காய்
வகுத்திடும் வழிகள் தன்னில்
காத்திரம் தரும் முறையே
காப்புறுதி செய்யும் வழியாம்.
வருமானம் வரும் வழியை
அறிந்துளோம் முன்னதாக
செலவீனம் ஆகும் தன்மை
திடீரென நிகழுங் காலை
நெருக்கடி மிக்க அந்த
நிலைமையை வெல்ல வேண்டில்
பொருத்தமாய் ஓர் உபாயம்
காப்புறுதி செய்வ தன்றோ…
எத்தகு இடர் வரினும்
எம்மிடம் செல்வம் உண்டேல்
சித்தத்தில் தெளிவு இருக்கும்
சிறிதெனக் கடந்து மீள்வர்
உயிரொடு, பொருட்கள் தமே
உலகோர்க்கு தேவை ஆகும்
உடனடிப் பொருளிழப்பால்
உலகவர் திகைத்து நிற்பார்.
மனையொன்று தீப்பிடித்தால்,
மருகியே பயிர் அழிந்தால்,
அனைத்திலும் நட்டம் நேர்ந்தால்
அழுதுதான் புரளத் தோன்றும்
அவசர விபத்தில் உயிர்க்கும்
வாகனச் சேதம் மற்றும்
பொறுப்பொடு சொத்து இழப்பு
தொழிலுக்கும் காப்பு உண்டு.
சிறுதொகை பேணும் போதே
பெருந்தொகை இழப்பு நேர்ந்தால்
உறுதொகை உதவி பெற்று
உலகவர் நன்மை பெறுவார்.
குடும்பத்தில் ஒருவர் மாண்டால்
குதூகலம் குன்றிப் போகும்
அவரினால் கிடைத்த நன்மை
அழிதலே காரணம் ஆம்.
ஆயினும் அவர்க்கு ஆங்கே
ஆயுள்காப் பீடு செய்தால்
தாயினைப் பெற்ற சேய்போல்
தழைத்திடும் அக் குடும்பம்
நோயினும் பிணியும் தொழிலும்
மிகைதரு நஸ்ட மெல்லாம்
சாய்ந்திடச் செய் யுபாயம்
காப்புறுதி செய்த லொன்றே.
ஐந்தொழில் தன்னில் முதலாய்
காத்தலே அமையு மென்பார்
அனைத்துள செல்வ மெல்லாம்
காப்ப தாம் காப்புறுதி.
நம்மிட முள்ள செல்வம்
நம்மவர்க் கீந்து பின்நாம்
நலிவுறும் சமயம் தன்னில்
அவரிடம் சென்று கேட்பின்
பண்பிலா தவராய் மாறி
பரிகசித்து நோகச் செய்வர்.
வெம்பியே அழுவ தல்லால்
வேறென்ன செய்தல் ஏலும்
ஆயினும் அப் பணத்தை
ஆர்வமாய்க் காப்புச் செய்தால்
ஆபத்த நேரந் தன்னில்
ஆருயிர் மருந்தாய்க் காக்கும்
பதினாறு செல்வம் பெற்று
வாழ்ந்திடச் சொல்வர் புவியில்
பதினாறும் காத்து வாழ
காப்புறுதி செய்தல் நன்று